|
அமெரிக்காவுடனான அணு உடன்பாடு ஒப்பந்தத்தைக் கண்டித்து தமுமுக
ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அமெரிக்காவுடன்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்துகொள்ளத் துடிக்கும் அணு ஆற்றல்
உடன்பாட்டை எதிர்த்து 21-07-08 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமெரிக்காவுடனான அணு உடன்பாடு முஸ்லிம்களின் நலனுக்கு எதிராக இருப்பதால்
முஸ்லிம் அமைப்புகள் அதனை எதிர்த்து வருவதாக ஒரு தவறான பிரச்சாரம்
நாட்டில் செய்யப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் மட்டுமல்லாது நாட்டில்
வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒட்டுமொத்தமாக நாட்டு மக்கள்
அனைவருக்கும் கேடு விளைவிக்கக் கூடியதாக அமெரிக்காவுடன் மன்மோகன் சிங்
அரசு செய்வதற்கு உத்தேசித்துள்ள 123 உடன்பாடும், அந்த உடன்பாட்டிற்கு
வழிவகுக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள
ஹைட் சட்டமும், சர்வதேச அணு ஆற்றல் முகைமையுடனான உடன்பாடும்
அமைந்துள்ளன. 123 உடன்பாடு அதற்கு நிபந்தனையாக அமைந்துள்ள ஹைட் சட்டமும்
நமது நாட்டின் இறையாண்மைக்கும், தன்னிச்சையான செயல்பாட்டிற்கும் உலை
வைப்பதாக அமைந்துள்ளன.

அமெரிக்காவில் இயற்றப்பட்ட இச்சட்டத்தின் விதிமுறைகளை இந்தியா எவ்வாறு
கடைப்பிடிக்கிறது என்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க
நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டு அதிபர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று
அச்சட்டம் கூறுகின்றது.

மேலும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில்
தலையிடும் வகையில் இச்சட்டத்தின் விதிமுறைகள் அமைந்துள்ளன. சுருக்கமாகச்
சொல்ல வேண்டுமெனில் 1947ல் பிரட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாம்
பெற்ற விடுதலையை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடகுவைக்கும் வகையில்
இந்த உடன்பாடு அமைந்துள்ளது.
இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்களான சேத்னா, சீனிவாசன்,
அய்யங்கார், அணு ஆற்றல் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஆ.
கோபாலகிருஷ்ணன், பாபா அணு ஆய்வு நடுவத்தின் முன்னாள் இயக்குனர் பிரசாத்,
இந்தியா அணு ஆற்றல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிர்வாக
இயக்குனருமான பிரசாத், இந்திரா காந்தி அணு ஆய்வு நிறுவனத்தின் முன்னாள்
இயக்குனர் பிளேசிட் ரொட்ரிக்ஸ் ஆகிய இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள்
கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹைட் சட்டம் இந்தியாவின் நலனுக்கு
எதிரானது என்று ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில்
பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுடனான அணு உடன்பாடு குறித்து
எழுப்பப்பட்ட அச்சங்களுக்கு பதில் அளிக்கும் போது அளித்த
வாக்குறுதிகளுக்கு முரணாக ஹைட் சட்டம் அமைந்துள்ளதாக இந்த விஞ்ஞானிகள்
குற்றஞ்சாட்டியுள்ளனர். உதாரணமாக இந்திய அணுகுண்டு வெடிப்புச் சோதனையை
நிறைவேற்றினால் உடனடியாக இந்த உடன்பாடு முடிவிற்கு கொண்டு வரப்படும்.
எனவே எதிர்காலத்தில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் அது நமது
நாட்டிற்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். இறக்குமதி
செய்யப்பட்ட அணு உலைகளுக்கு எரிபொருள் இல்லாமல் நாம் பெரும்
அவதிப்படுவோம்.
பாசிச சக்திகளின் கையில் ஆட்சி சென்றுவிடக் கூடாது என்பதற்காக ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டது. நமது நாட்டிற்கு சாதகத்தை விடப்
பாதகங்களை ஏற்படுத்தக்கூடிய அமெரிக்காவுடனான அணுஆற்றல் உடன்பாட்டை
முன்வைத்து மதச்சார்பற்ற சக்திகளின் ஐக்கியம் நம்பிக்கை வாக்கெடுப்பின்
காரணமாக பிளவுபட உள்ளது பெரும் வேதனையை அளிக்கின்றது. அமெரிக்காவிடம்
நமது நாட்டு நலனை அடகு வைக்கும் அணு ஆற்றல் உடன்பாட்டை மத்திய அரசு
கைவிட வேண்டும். நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று
சேர்ந்திருப்பதைவிட அமெரிக்காவின் நலனே பெரிது என்று மன்மோகன் சிங் அரசு
செயல்படுவதை வன்மையாகக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
தமுமுகவின் மாநில துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி தலைமையில்
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் எம். தமிமுன்
அன்சாரி, மௌலா நாசர், மாநில துணைச் செயலாளர்கள் ஹாரூன் ரசீது,
ஹாஜாகனி வடசென்னை மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது,
தென்சென்னை மாவட்டத் தலைவர் சீனி முஹம்மது, காஞ்சி மாவட்டத் தலைவர் மீரா
மொய்தீன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்குகொண்டார்கள்.
|