அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது இடதுசாரிகளின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் -  திமுகவிடம் தமுமுக கோரிக்கை


நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது இடதுசாரிகளின் நிலைப்பாட்டிற்கு திமுக வாக்களிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார் அதன் விபரம் வருமாறு:
வரும் ஜூலை 22 அன்று நாடாளுமன்றத்தில் அமெரிக்காவுடனான அணுஆற்றல் உடன்பாடு தொடர்பாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் போது நாட்டு நலன் கருதி இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகத் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்..

அமெரிக்காவுடனான அணு உடன்பாடு முஸ்லிம்களின் நலனுக்கு எதிராக இருப்பதால் முஸ்லிம் அமைப்புகள் அதனை எதிர்த்து வருவதாக ஒரு தவறான பிரச்சாரம் நாட்டில் செய்யப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் மட்டும் அல்லாது நாட்டில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒட்டுமொத்தமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் கேடு விளைவிக்கக் கூடியதாக அமெரிக்காவுடன் மன்மோகன் சிங் அரசு செய்வதற்கு உத்தேசித்துள்ள 123 உடன்பாடும், அந்த உடன்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ஹைட் சட்டமும், சர்வதேச அணு ஆற்றல் முகைமையுடனான உடன்பாடும் அமைந்துள்ளன. 123 உடன்பாடு அதற்கு நிபந்தனையாக அமைந்துள்ள ஹைட் சட்டமும் நமது நாட்டின் இறையாண்மைக்கும், தன்னிச்சையான செயல்பாட்டிற்கும் உலை வைப்பதாக அமைந்துள்ளன. அமெரிக்காவில் இயற்றப்பட்ட இச்சட்டத்தின் விதிமுறைகளை இந்தியா எவ்வாறு கடைபிடிக்கின்றது என்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அந்நாட்டு அதிபர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அச்சட்டம் கூறுகின்றது. மேலும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் தலையிடும் வகையில் இச்ச்சட்டத்தின் விதிமுறைகள் அமைந்துள்ளன. சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் 1947ல் பிரட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாம் பெற்ற விடுதலையை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடகுவைக்கும் வகையில் இந்த உடன்பாடு அமைந்துள்ளது.

இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்களான
ஹெச். என். சேத்னா, எம். ஆர். சீனிவாசன், பி.கே. அய்யங்கார், அணு ஆற்றல் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன், பாபா அணு ஆய்வு நடுவத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.கே. பிரசாத், இந்தியா அணு ஆற்றல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குனருமான வை. எஸ். ஆர். பிரசாத், இந்திரா காந்தி அணு ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிளேசிட் ரொட்ரிக்ஸ் ஆகிய இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹைட் சட்டம் இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்று ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுடனான அணு உடன்பாடு குறித்து எழுப்பப்பட்ட அச்சங்களுக்கு பதில் அளிக்கும் போது அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக ஹைட் சட்டம் அமைந்துள்ளதாக இந்த விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். உதாரணமாக இந்திய அணுகுண்டு வெடிப்புச் சோதனையை நிறைவேற்றினால் உடனடியாக இந்த உடன்பாடு முடிவிற்குக் கொண்டு வரப்படும். எனவே எதிர்காலத்தில் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால் அது நமது நாட்டிற்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். இறக்குமதி செய்யப்பட்ட அணு உலைகளுக்கு எரிப்பொருள் இல்லாமல் நாம் பெரும் அவதிப்படுவோம்.
. இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவையை நிறைவேற்றுவதற்கு அமெரிக்காவுடனான அணுஆற்றல் உடன்பாடு அவசியம் தேவை என்று உடன்பாட்டின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றார்கள். ஆனால் அமெரிக்காவுடன் அணுஆற்றல் உடன்பாடு மேற்கொண்ட பிறகு அதன் காரணமாக இந்தியாவில் அணுமின் நிலையங்கள் இயங்கத் தொடங்கினாலும் இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவைகளில் 9 சதவிகிதத்தைக் கூட அது பூர்த்தி செய்யாது. இது எந்த வகையிலும் நமது எரிசக்தி தேவை பரிபூரணமாகிவிடும் என்ற பாதுகாப்பு உணர்வை நமக்கு அளிக்காது. இது மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகளில் தயாராகும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டிற்கு அனல் மின்நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும். நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு ஆகும் செலவை விட இறக்குமதி செய்யப்படும் அணுஉலைகளைக் கொண்டு இயங்கும் நிலையத்தை உருவாக்க மூம்மடங்கு அதிகமாக இருக்கும். இந்தப் பின்னணியில் நமது தன்மானத்தை அடகுவைத்து விட்டு அமெரிக்காவுடன் அணு ஆற்றல் உடன்பாடு செய்து கொள்வது நமக்குத் தேவையா?

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், "அமெரிக்காவின் பெரும் அணு வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவை ஒரு பெரும் சந்தையாகக் கருதுகின்றன. தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு பலவீனமான, இணக்கமான பிரதமரைப் பயன்படுத்தி வருகின்றன. இந்த வர்த்தகத்தின் பாரதூரமான விளைவாக, மக்களவையில் செய் அல்லது செத்து மடி என்ற அடிப்படையில் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தயாராகியிருக்கிறார். இந்த அணுஆற்றல் உடன்பாட்டை முன்வைத்து தனது அரசாங்கத்தையே பணயம் வைக்கப் பிரதமர் துணிந்துள்ளார். இந்த வாக்கெடுப்பில் யார் வெற்றிப்பெற்றாலும் சரி நமது நாடு தனது ஒருமைப்பாட்டை, ஒருங்கிணைப்பை, சகோதரத்துவத்தை இழந்து விடும். அமெரிக்க வர்த்தக மூலதனத்தை விரிவாக்குவதற்காக ஜார்ஜ் புஷ் மேற்கொண்ட வலுவான, எதேச்சதிகரமான கொள்கை இந்தியாவின் தேசியக் கொள்கையாக மாறிவிட்டது. நேரு-இந்திராவின் சோசியலிச அணிசேர நிலைப்பாடும், நமது பாரம்பரிய பஞ்சசீலக் கொள்கையும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் தேற்றங்களுக்கும், நோக்கங்களுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது" என்று மனவெதும்பி எழுதியுள்ளதைத் தங்கள் மேலான பார்வைக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

முன்னாள் பிரதமர் இந்திரா அம்மையாரின் அறிவியல் ஆலோசகராக இருந்த அசோக் பார்த்தசாரதி எழுதியுள்ள ஒரு விரிவான கட்டுரையில் அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் உடன்பாடு நமது நாட்டு நலனுக்கு எதிரானது என்று ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.

பாசிசச் சக்திகளின் கையில் ஆட்சி சென்று விடக் கூடாது என்பதற்காகத் தங்களுடைய பெரும் முயற்சியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டது. நமது நாட்டிற்குச் சாதகத்தை விடப் பாதகங்களை ஏற்படுத்தக் கூடிய அமெரிக்காவுடனான அணுஆற்றல் உடன்பாட்டை முன்வைத்து மதசார்பற்ற சக்திகளின் ஐக்கியம் நம்பிக்கை வாக்கெடுப்பின் காரணமாக பிளவுப்பட உள்ளது பெரும் வேதனையை அளிக்கின்றது. தாங்கள் இப்பிரச்னையில் தலையிட்டு அமெரிக்காவிடம் நமது நாட்டு நலனை அடகு வைக்கும் அணுஆற்றல் உடன்பாட்டைக் கைவிட மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நாட்டில் மதசார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்திருப்பதைவிட அமெரிக்காவின் நலனே பெரிது என்று காங்கிரஸ் கட்சி முடிவுச் செய்தால், இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக எடுத்து நமது நாட்டின் இறையாண்மையை, சுதந்திரத்தை , ஐக்கியத்தை, தன்மானத்தைக் காக்க முன்வரவேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.