அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

பாஜகவுக்கு மகுடம் சூட்டும் காங்கிரஸ்?

அமெரிக்கா உடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மத்திய அரசுக்கு அழித்து வரும் ஆதரவை விலக்கி விடப் போவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ எனப்படும் உயர் மட்டக் குழு அறிவித்துள்ளது. காங்கிரஸ் அரசுக்கு மதவாத அமைப்புகள் ஆட்சிக்கு வருவதை பற்றிய கவலை இல்லை. ஆனால் அமெரிக்காவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும். என்பதில்தான் கவலை எனவும் குற்றம் சாட்டியுள்ளது. தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவுடனான ஒப்பந்தம் கூடாது என்று இப்பிரச்சனையில் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதற்காக ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு தயாராகி விட்டனர் கம்யூனிஸ்ட்கள். அதைத்தான் பொலிட் பீரோவின் முடிவும் எதிரொலித்துள்ளது.

அதே போல் காங்கிரஸ் கட்சியும் அமெரிக்க ஒப்பந்ததில் கையெழுத்து இடுவதில் பிடிவாதமாக உள்ளது.அக்கட்சி யின் தலைவி சோனியாவும் தேர்தலை சந்திக்க தயாராகுங்கள் என்று கட்சியினருக்கு கட்டளையிட்டுள் ளார். எனவே அமெரிக்க நலனுக்காக நாடு இன்னொரு தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது. எந்த நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் ஆபத்து அமெரிக்கா மூலமாகவே வருவதை நமது நாட்டு நிகழ்வுகளே காட்டுகின்றன.

ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்ற அளவுக்கு காங்கிரஸ் இவ்வொப்பந்தத்திற்கு வக்காலத்து வாங்குவதன் பின்னனிதான் நமக்கு புரியவில்லை.

கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கான அகில இந்திய ஒதுக்கீடு, பாபரி மஸ்ஜித் பிரச்சனை, கிருஷ்ணா கமிஷன், குஜராத் இனப்படுகொலை போன்றவற்றில் இது போன்ற அதி தீவிர நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்காக 50 வருட காலமாக ஓட்டளித்து வந்த சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கொஞ்சம் நன்றி சொன்னாற் போல் இருந்திருக்கும். ஆனால் அதற்கெல்லாம் சிறு துரும்பு கூட எடுத்துப் போடாத காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் முதலாளிக்கு அடிமை சேவகம் செய்வதை யாராவது தடுத்து விட்டால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. தலையே போனாலும் பரவாயில்லை தேர்தலுக்கு தயாராவோம் என முழங்குகிறது.

சமையல் எரிபொருள், பெட்ரோல், டீசல் என ஒட்டு மொத்த விலைவாசி ஏற்றங்களால் கடுப்பில் இருக்கும் மக்களிடம் எந்த முகத்தை வைத்து இவர்கள் ஓட்டு கேட்பார்கள் என்று புரியவில்லை. அமெரிக்க நட்பு காங்கிரஸுக்கு நிதாமின்மையை ஏற்படுத்திவிட்டது தெரிகிறது. மதவாத பாஜகவுக்கு மகுடம் காங்கிரஸால் தான் ஏறப் போகிறது. அது போன்று நிகழ்ந்தால் காங்கிரஸ் கட்சியை எதிர்கால சந்ததியும் மன்னிக்காது

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.