முஸ்லிம்களின் கல்விச் சேவ

பேரா.ஜெ.ஹாஜாகனி

இந்தியாவில் முஸ்லிம்களின் கல்வி, மற்றும் சமூகப் பொருளாதார நிலையை ஆய்வு செய்வதற்காக ஐ.மு.கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ராஜேந்தர் சச்சார் குழுவும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும், தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்து விட்டன. சச்சார் குழு அறிக்கை பாராளுமன்றத்திலும் விவா திக்கப்பட்டுள்ளது. ஊடுகதிர்  படம் போல முஸ்லிம்களின் நிலையை வெளிப்படுத்தியுள்ள இந்த அறிக்கைகள், கல்வியில் முஸ்லிம் சமுதாயம் மிக மோசமான பின்னடைவில் உள்ளதைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளன. பல நூறு ஆண்டுகள், ஒருங்கி ணைத்து இந்த நாட்டை உருவாக்கி, ஆட்சி செய்தோர் முஸ்லிம்களாய் இருந்தும் ஏனிந்த பின்னடைவு? வெள்ளை ஏகாதிபத்தியத் தில் அடிமைப்பட்ட இந்தியாவில் விடுதலை வேட்கை வெங்கனலாய் சுடர்ந்தெழுந்தது.

வெள்ளைக்காரர்களுக்கு எதிரானப் போராட்டத்தில் வீரியமாய் முன்னின் றோர் முஸ்லிம்கள். முதல் சுதந்திரப் போரினை முன்னின்று நடத்தியதோடு எல்லா வகையிலும் வெள்ளையர்களை எதிர்த்து நின்றார்கள். அதன் ஓர் அங்கமாக வெள்ளையர்கள் போதித்தக் கல்வியையும் வெறுத்தார்கள். ஆங்கில மொழியையே ஹராம் (தடுக்கப்பட்டது) என அறிவித்தார்கள். வெள்ளிக்கிழமை ஜும்ஆ மேடைகளும், இதற்காகப் பயன் படுத்தப்பட்டன. கல்வியைத் தேடுவது கட்டாயக் கடமை என அறிவுறுத்தப்பட்ட மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலக் கல்வியை ஆவேசமாய் எதிர்த்து, அறி யாமைப் பள்ளத்தாக்கில் முஸ்லிம் சமுதாயம் தன்னை அறியாமலேயே தவறி விழுந்தது.

முஸ்லிம் சமுதாயத்தை முழுவதும் முடக்க விரும்பிய முரட்டு வெள்ளையர் கள், முஸ்லிம்கள் மூடத்திலேயே மூழ்கிக் கிடக்கும் வகையில் பல சதிகளைச் செய்தனர். இதனால் முழுவதுமாக கல்வியிலிருந்து முஸ்லிம் சமுதாயம் கழற்றிவிடப்பட்டது. இந்நேரத்தில், தொலைநோக்கு மிக்க முஸ்லிம் அறிஞர் கள், கல்வி மறுப்பின் விளைவுகளைத் துல்லியமாய் உணர்ந்து துள்ளி எழுந்தனர். சரியான பாதையில் சமுதாயத்தை வழிநடத்த முயன்றனர்.

இதற்குத் தடையாக நின்றவர்கள் அன்றைய முல்லாக்கள், மேற்கத்தியக் கல்வி பயில்வது மார்க்கத்திற்கு விரோதம். திருக்குர்ஆனை மனப்பாடம் செய்வது மட்டுமே கல்வி என அவர்கள் வாதிட்ட னர். அக்கருத்தை மக்களிடம் பரப்பினர். வெள்ளையர்கள் மீதிருந்த வெறுப்பால் முஸ்லிம்களும் ஆங்கிலக் கல்வியை அறவே வெறுத்தனர். ஆங்கிலக் கல்வி இஸ்லாம் மார்க்கத்தை சீர்குலைத்துவிடும் என்ற கருத்தும் பரப்பப்பட்டதால், இந்தச் சமுதாயத்தில் கல்வியை வளர்க்க முனைந்த அறிஞர்கள் கடும் சோதனை களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

சளைக்காத அறிவுப்போராளி சர் சையத் அஹமத் 'கான்'

தாழ்வுற்று வறுமை மிஞ்சி, பாழ்பட்டுக் கிடந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு கல்வி விழிப்புணர்வு என்ற கலங்கரை விளக் காய் வந்தவர் சர் சையத் அஹமத் கான். ஏப்.17, 1817ல் டெல்லியில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்த சையத் அஹமத் கான், முறைப்படி பள்ளி சென்று பயிலாதவர். கற்றறிந்த அறிஞர்கள் வாயிலாகக் கல்வியை அடைந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியில் உதவிச் செயலாளராக பணியாற்றிய இவர் 1841ம் ஆண்டு சட்டம் பயின்று முன்ஷி பதவிக்குத் தேர்வு பெற்றவர். 1878ம் ஆண்டு துணை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். 1882ம் ஆண்டு ஆங்கில அரசாங்கம் அவரைக் கல்வி ஆணையத் தின் உறுப்பினராக்கியது.

ஆங்கிலக் கல்வியை அறவே மறுப்ப தால் ஏற்படும் ஆபத்துகளை ஆழமாக உணர்ந்திருந்த சர் சையத் அஹமத் கான், முஸ்லிம்களை நவீன கல்வியைக் கற்குமாறு தூண்டினார். முஸ்லிம்கள் அகத்திலும், புறத்திலும் நவீனமாய்த் திகழவேண்டும் என்று கருதிய அவர் கட்டுப்பெட்டித் தனத்தை விட்டொழிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்தார்.

1864ம் ஆண்டு காஜிப்பூரில் மொழி பெயர்ப்புக் கழகம் (பழ்ஹய்ள்ப்ஹற்ண்ர்ய் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) என்ற அமைப்பைத் தொடங்கினார். ஐரோப்பிய நூற்களை உருது மொழியில் மொழிபெயர்த்துப் பரவச் செய்தார். 1866ம் ஆண்டு அலிகர் இன்ஸ்டிட்யூட் கெசட் என்ற வார இதழைத் தொடங்கினார். முஸ்லிம்களிடையே உயர்கல்வி விழிப் புணர்வை ஏற்படுத்த அந்த இதழைப் பயன்படுத்தினார்.

1875ம் ஆண்டு அலிகரில் முஹம்ம தன், ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை உருவாக்கினார். 1920ம் ஆண்டு அந்த கல்லூரி, அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் என்ற பெயர் பெற்று, இன்று வரை சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

கல்வி விதைகள்

1886ம் ஆண்டு சர் சையத் அஹமத் கான் முஸ்லிம் கல்வி மாநாடு என்ற அமைப்பை உருவாக்கினார். அகில இந்திய அளவில் கல்வி விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக உருவாக் கப்பட்ட இந்த அமைப்பு நாட்டின் முக்கிய நகரங்களில் கல்வி மாநாடுகளை நடத்தி யது. தமிழ்நாட்டிலும் இவ்வமைப்பு தடம் பதித்தது. இவ்வமைப்பின் தூண்டுதலால் தமிழகத்தில் முஸ்லிம்கள் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கினர்.

1873ம் ஆண்டு சென்னை மாகாணத் தின் பொதுக் கல்வி இயக்குநரகம்,  முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நகரங்களில் உருது மீடியம் பள்ளிகளை உடனடியாக நிறுவ ஆணை பிறப்பித்தது. 1901ம் ஆண்டு நடைபெற்ற 15வது முஸ்லிம் கல்வி மாநாட்டின் விளைவாக, புகழ்பெற்ற தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் (ஙஊஆநஒ) உருவானது. சென்னை புதுக்கல்லூரி உள்ளிட்ட ஏராளமான கல்வி நிறுவனங் களை மியாஸி நடத்தி வருகிறது.

இஸ்லாமியா கல்லூரி வாணியம்பாடி

வட ஆற்காடு மாவட்டம் வாணியம் பாடி முஸ்லிம்கள், 'வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம்' (யஊஙந) என்ற அமைப்பை 1903ம் ஆண்டு தொடங்கினர். சர் சையத் அஹமத்கானின் கருத்து களால் உண்டான எழுச்சியே இவ்வமைப் பின் தோற்றத்திற்குக் காரணமாகும். 1905ம் ஆண்டு வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இஸ்லாமியா தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. ஜனாப் டி.ஹாஜி பத்ருதீன், ஜனாப் மலங் ஹயாத் பாஷா, ஜனாப் டி.அமீனுதீன், ஜனாப் மலங் அஹமது பாஷா ஆகி யோரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் தொடக்கப்பள்ளி 1912ம் ஆண்டு இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது.

1916ம் ஆண்டு வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரிக்கு பெண்ட்லேண்ட் பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்டது. நவாப் சி. அப்துல் ஹக்கீம் போன்ற கொடையாளிகளின் உதவியால் 1919ம் ஆண்டு இஸ்லாமியா கல்லூரி தொடங்கப் பட்டது.
புதுக்கல்லூரி சென்னை 1901ம் ஆண்டு தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் பிறந்தது. 1912ம் ஆண்டு முஸ்லிம்களுக்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என மியாசியின் அப் போதையத் தலைவர் நீதிபதி அப்துர் ரஹீம் தீர்மானித்தார். உஸ்மானியா கல்லூரி என்ற பெயரில் அக்கல்லூரி அமைய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மதரúஸ ஆஸம் பள்ளியில் இன்டர் மீடியட் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

1948ம் ஆண்டு நீதிபதி பஷீர் அஹமது சயித் மியாசியின் செயலாளராக இருந்த போது, ஆடவர் கல்லூரி தொடங்க அனுமதி கோரும் ஆவணங்கள் பல் கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. 1951ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதி யும், இணைப்பும், கிடைத்தது. லண்டன் ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தின் நியூ காலேஜை முன்மாதிரியாக்கி புதுக்கல்லூரி தொடங்கப்பட்டது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி

விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த கல்வியாளரும், காந்தியடிகளின் மிக நெருங்கிய நண்பருமான ஜமால் முஹம்மது, ஜனாப் என்.எம்.காஜா மைதீன் ராவுத்தர் மற்றும் மஜ்லிஸுல் உலமாவினர் இணைந்து, 1951ம் ஆண்டு புகழ் பெற்ற ஜமால் முஹம்மது கல்லூரியை நிறுவினர்.

காதிர் முகைதீன் கல்லூரி  அதிராம்பட்டினம்

எம்.கே.என்.மதரஸா அறக்கட்டளை யால் காதிர் முகைதீன் கல்லூரி துவங்கப் பட்டது. மிகப்பெரும் புரவலரான காதிர் முகைதீன் மற்றும் அவரது சகோதரர் களால் மதரஸா அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது. ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களால் 1955ம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரி தொடங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஏழை, எளிய மக்களும், குறிப்பாக மிகப் பெரும்பான்மையாக முஸ்லிமல்லாத சமுதாயத்தினரும் கல்வி பெற்றுப் பயனடைகின்றனர்.

ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி சென்ன

தென்னிந்திய கல்விச் சங்கம் 1951ம் ஆண்டு நீதிபதி பஷீர் அஹமத் சயீத் அவர்களால் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் சார்பாக 1955ம் ஆண்டு நீதிபதி பஷீர் அஹமத் சயீத் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற இக்கல்லூரியில் பெரும்பான்மையாக முஸ்லிம் பெண்களும், சகோதர சமுதாயப் பிரமுகர்களின் பெண்களும் பயின்று பயன்பெறுகின்றனர்.

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம

கருத்த ராவுத்தர் என்ற பெயரால் அறியப்படும் எஸ்.முஹம்மது மீரான் இக்கல்லூரியை நிறுவினார். 1956ம் ஆண்டு முதலமைச்சர் காமராஜர் இக்கல்லூரியைத் தொடங்கி வைத்தார்.

சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மேல்விஷாரம


1919ம் ஆண்டு துவங்கப்பட்ட மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கம், அதன் நிறுவனரான சி.அப்துல் ஹக்கீம் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் 1965ம் ஆண்டு சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியைத் துவங்கியது.

முஹையத் ஷா சர்குரு வக்ஃப் வாரியக் கல்லூரி  மதுரை
ஜனாப் ஹீராபாய் மற்றும் கோரிப் பாளையம் எம்.அப்துல் காதர் (எம்.ஏ.கே) ஆகியோரின் பெருமுயற்சியால் திரு. எஸ்.ஜெ.சாதிக் பாஷா அவர்கள் வக்ஃப் வாரிய அமைச்சராக இருந்தபோது எம்.எஸ்.எஸ்.வக்ஃப் வாரியக் கல்லூரி ஜூலை 25, 1968ம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

மஸ்ஹருல் உலூம் கல்லூரி ஆம்பூர்

ஆம்பூர் முஸ்லிம் கல்விச் சங்கத்தால் 1969ம் ஆண்டு மஸ்ஹருல் உலூம் கல்லூரி துவங்கப்பட்டது.

டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி  இளையான்குடி

கேப்டன் அமீர் அலி உள்ளிட்ட சமூக ஆர்வலர்களால் 1970ம் ஆண்டு இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி  திருநெல்வேலி

முஸ்லிம் சமுதாயத்தில் அறியாமை இருளை அகற்ற ஆர்வம் கொண்ட முஸ்லிம் ஆர்ஃபனேஜ் கமிட்டி நிர்வாகி களும், சமுதாயப் புரவலர்களும் இணைந்து, ஜூலை 1, 1971ம் ஆண்டு நெல்லை பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியைத் தொடங்கினர்.

காயிதேமில்லத் கல்லூரி  மேடவாக்கம், சென்னை

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையால் 24.07.1975ல் சென்னை மேடவாக்கத்தில் காயிதே மில்லத் கல்லூரி தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை, எளிய மக்களும், பெரும்பான்மையாக முஸ்லிமல்லாதோரும் இக்கல்லூரியால் பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

முஸ்லிம் கலைக்கல்லூரி  திருவிதாங்கோடு

1981ம் ஆண்டு உருவான முஸ்லிம் கல்விச் சங்கத்தின் முயற்சியால் 1982ம் ஆண்டு திருவிதாங்கோட்டில் முஸ்லிம் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது.

தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி லி கீழக்கரை


சீதக்காதி அறக்கட்டளையால் 1988ம் ஆண்டு தாஸிம் பீவி மகளிர் கல்லூரி துவங்கப்பட்டது. பெண்கள் உயர் கல்வி பெற இக்கல்லூரி பெரிதும் உதவுகிறது.

முஹம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி லி சோழிங்கநல்லூர்

1973ம் ஆண்டு உருவான முஹம்மது சதக் அறக்கட்டளையால் 1991ம் ஆண்டு சென்னை சோழிங்கநல்லூரில் முஹம்மது சதக் கல்லூரி தொடங்கப்பட்டது.

ராஜகிரி, தாவூத் பாட்சா கலை, அறிவியல் கல்லூரி லி பாபநாசம்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ராஜகிரி தாவூத் பாட்சாவால் துவங்கப்பட்ட இக்கல்லூரி, தரமான உயர்கல்வியை மாணவர்களுக்குத் தந்து வருகிறது.
மேற்கண்ட கலை, அறிவியல் கல்லூரி கள் மட்டுமல்லாமல், ஏராளமான பொறியியல் கல்லூரிகளும், தொழில் நுட்பக் கல்லூரிகளும் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களால் அனைத்து சமுதாய மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர்.
கலை, அறிவியல் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் எனப் பல்வேறு கல்லூரிகளை முஸ்லிம்கள் நடத்திய போதும், மருத்துவக் கல்லூரி மட்டும் ஒரு நெடுநாள் கனவாகவே இருந்து வருகிறது.


 
செய்திகள்